Tuesday, December 27, 2005

 

சில யதார்த்தங்களின் உட்புறம்...

------------------------------------------------------------------------
எல்லாம் இந்தக் கையெழுத்துப் பத்திரிகையால் வந்தது. இந்தப் பத்திரிகை மூலமாய் இப்படி சில நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு கிட்டதட்ட எல்லா தமிழ் எழுத்தாளர்களையும் தெரியும். நன்றாக எழுதி காலமானவர்கள், நன்றாக எழுதுபவர்கள், எழுத முயற்சிப்பவர்கள், எழுதி தோற்றவர்கள், எழுத்தைக் கொன்றவர்கள்... இப்படி எல்லா வகையினரையும் தெரியும். இப்படி சில எழுத்தாளர்களின் பாதிப்புகளோடுதான் நாங்களே கூட எங்கள் பத்திரிகையில் எழுதி வந்தோம்.

பத்திரிகையை பரப்பும் நோக்கத்தில் பல எழுத்தாளர்களை நேரடியாய் சந்தித்து விளக்கி, அவர்களின் கருத்தை கேட்கிற யோசனையோடு ராமு (ராமு என்கிற ராமமூர்த்தி என் நண்பன்) என்னை சில இடங்களுக்கு அழைத்தான். முதலில் நாங்கள் லட்சியவாதிகளாய் நினைத்திருந்த சில எழுத்தாளர்களை சந்திப்பதாய் முடிவு செய்து ஒரு லிஸ்ட் தயாரித்தோம். அதில் ஒரு பத்துபேர் வந்தனர். கொஞ்சமாய் எழுதத் துவங்கி, பேர் சம்பாதித்து, பின் பணம் சம்பாதித்து, இப்போது பணம் மட்டுமே சம்பாதிக்க எழுதித் தள்ளும் பாலசரவணன்... மயக்கமான உவமைகளை வைத்து மட்டுமே காட்சியையும் ஏன் காலத்தையும் ஓட்டி விடுகிற பாடலாசிரியர் நதிநர்த்தகன்... இன்னும் வாசனை வீசுகிற புதுப் பெருங்காய டப்பாவாய்... ஒளிரும் எழுத்து எழுதுகிற மீ.சோ... சிறு பத்திரிகைகளில் மட்டுமே எழுதுவேன் என்கிற இலக்கியத்திமிர் கொண்ட கு.சே.ரா... இப்படி ஒரு பத்துபேர் லிஸ்ட்டோடு கொஞ்ச நாள் அலைந்தோம்.

மீ.சோ.வை எப்போது போனாலும் பார்க்க முடியவில்லை. உடம்பு சுகமில்லை, ஓய்வாக இருக்கிறார், டாக்டர் வந்திருக்கிறார்... இப்படி ஒரே முகம் கொண்ட பல காரணங்கள்.

பாலசரவணன் அடுத்த புதன்கிழமை என்று 'அப்பாயின்ட்மென்ட்' (!!) கொடுத்திருந்தார். நதிநர்ததகன் தனி ரூமில் பாடல் புனைவதால் டிஸ்டர்ப் செய்யக் கூடாதென்றார் அவரது பி.ஏ. நானும் ராமுவும் ஆனால் ஒரு முடிவோடு ரிசப்ஷனிலேயே தவம் கிடந்தோம். பி.ஏ பல முயற்சிகள் மேற்கொண்டு தோற்றுப்போய் மேலே சென்று நதிநர்த்தகனிடம் எங்களைப் ப்ற்றி சொன்னார். அந்த ரிசப்ஷன் ரூம் முழுக்க போட்டோக்களும், புத்தகங்களும். முதல்வர்களுடன் (!) சிரித்தபடி, இலக்கிய-கம்-அரசியல்வாதிகளை அணைத்தபடி, எம்.ஜி.ஆர் காலில் விழுந்தபடி, சுயமரியாதை இயக்கத்தின் தலைவராய் பொறுப்பேற்றபடி... போட்டோக்கள். இதுவரை வெளிவந்துவிட்ட அவரின் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் அட்டைகளில் எல்லாம் நர்த்தனமாடியபடி இதே நதி...!

'வாங்க தம்பி... என்ன வேணும்? '

'சார்! வணக்கம். நாங்க கலையிலும் இலக்கியத்திலும் நிறைய்ய ஆர்வத்தோடு இருக்கிறவங்க. எங்களோட வட்டத்தை இன்னும் பெரிசுபடுத்திக்கற ஆசையில் 'குளம்'னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கியிருக்கோம். நாங்க உங்களோட ரசிகர்கள். உங்க வார்த்தைகளில் இருக்கிற புதுப் ப்ரயோகத்தையும், உவமைகளில் இருக்கிற மயக்கத்தையும் ரசிக்கறவங்க. நீங்க இந்த பத்திரிகையப் படிச்சுட்டு கருத்து சொன்னா அது எங்களுக்கு நிறைய உபயோகமா இருக்கும்.' ராமு சுருக்கமாய், அளவாய் ஆனால் தெளிவாய் சொன்னான்.

'ம்... நல்லது... நல்லாருக்கு' நதிநர்த்தகன் குளத்தை திருப்பி திருப்பி பார்த்தார். வேகமாய் புரட்டினார். பின் மூடி வைத்தார். ஏதோ சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை தூண்டுகிறபடி எப்போதும் முகத்தை வைத்து இருந்தார்.

எதிர்பார்ப்பின் முடிவாய் எஙகளைப் பார்த்து மெதுவாய், 'காபி சாப்பிடுங்க' என்றார்.

'அதெற்க்கென்னங்க!...' என்றபடி நாங்கள் வழிய ஆரம்பிக்க, உச்ச குரலில், 'என் நூல்கள் எல்லாம் படிச்சுருக்கீங்களா?' என்று அதட்டலாய் கேட்டார்.

'கிட்டதட்ட எல்லாமே...' முடிப்பதற்குள் அவராகவே முந்திக்கொண்டு , 'கிட்டதட்ட' என்றார். உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டு, 'சமீபத்துல அஞ்சு நூல் வெளியிட்டிருக்கேன். படிச்சீங்களா?' நாங்கள் மவுனமாய் இருந்தோம்.

'என் சோலையில் நானே பூ', 'என் வானத்திற்கான குடை', 'வேர்களில் ஆடும் என் தொட்டில்', 'என் மேகத்தின் சிறகுகள்' என்று வரிசையாய் அடுக்கினார். 'அந்த நூல்களைப் படிங்க. நான் ரொம்ப நல்லா பண்ணிருக்கேன் அஞ்சுலயும். அதையெல்லாம் உங்களை மாதிரி இளைஞர்கள் படிக்கணும். ஆமா.. '

நதிநர்த்தகனின் குரல் எஙகளுக்குப் புதிதல்ல. ஆனாலும், இப்போது இன்னும் கொஞ்சம் கரகரப்பு சேர்ந்து புதிதாய் கட்டளையிடுவது மாதிரி தோன்றியது. '

சினிமா பாட்டிலதான் நீங்க நல்லா செய்திருக்கீங்கன்றது எங்க எண்ணம் ' என்றேன்.

' ம்? ' என்று குரலை உயர்த்தி முகத்தை நேராக்கி என்னைப் பார்த்தார்.

'இல்லை... தனிக் கவிதைகளைக் காட்டிலும் சினிமாவுக்காக எழுதின உங்களின் சில பாடல்கள் நல்லா வந்திருக்குங்கறது எங்க கருத்து '.

'கவிதைலயும் பண்ணிருக்கேன். பாட்டிலயும் பண்ணிருக்கேன்'.

'கண்டிப்பா... ஆனா...'

'காபி சாப்பிடுங்க' என்றார் மறுபடி. சட்டென்று ஒரு சீற்றமும் பரபரப்பும் எனக்குள் தொற்றிக் கொண்டன. ராமுவைப் பார்த்தேன். சிரித்தான். அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு எளிதாய், முழுமையாகப் புரிந்தது.

நதிநர்த்தகன் 'என் மேகத்தின் சிறகுகள்' புத்தகத்தை திடீரென மேஜை மீது விட்டெறிந்தார். வழுக்கிக் கொண்டு அது அவர் பி.ஏ காலடியில் விழுந்தது. அதைப் பணிவாய் எடுத்து என்னிடம் கொடுத்த போது பி.ஏ முகத்தில் சலனமே இல்லை. ஒரு இயல்பான கடமை போல அதைச் செய்தான். நான் குத்துமதிப்பாய் ஒரு பக்கத்தை எடுத்தேன். இதற்குள் ராமு என்னை நெருங்கி வந்து முகத்தை உள் நுழைத்துப் படித்தான். வேண்டுமென்றே சத்தமாய் படித்தான்.

' உன்னுடைய விழிகளுக்குள்
என் வானம் தெரிகிறது
உண்மைதான்.
ஆனால் என் மேகம்
உன் கூந்தலில் அல்லவா இருக்கிறது?'

படித்து விட்டு நேரே அவரைப் பார்த்தான். லேசாய் சிரித்தபடி சொன்னான். 'இத நான் முன்னமே படிச்சிருக்கேன். குங்குமத்ல வந்ததா?'

'தனித்தனியாய் அவ்வப்போது படிக்காதீர்கள். மொத்தமாய், மொத்தமாய் இந்த நூலைப் படிக்க வேண்டும். காதலின் மென்மையை எல்லாம் இதில் நான் இறக்கி வைத்திருக்கிறேன்'.

ராமு சும்மாயிருந்திருக்கலாம். ஆனால் சீண்டுவது என்று முடிவெடுத்து 'ஆமாம் சார்! அருவியில் குளிப்பதற்கும், சொம்பு சொம்பாய் மொண்டு குளிப்பதற்கும் வித்யாசம் இருக்கத்தானே செய்யும்!' என்றான்.

'அ!... ம்! அருவி!' என்றவர் சட்டென்று தன் பி.ஏவைப் பார்த்து 'சண்முகம்! ரவிக்குமார் படத்துக்கு அந்த அருவிப் பாட்டு எழுதிக்கொடுத்தேனே, செக் வந்துச்சா பாரு! இல்லேன்னா என்னாச்சுன்னு உடனே போன் போடுப்பா. நல்ல வேளை தம்பி அருவின்னதும்தான் நெனப்பு வந்தது', என்றபடி மறுபடி எங்களைப் பார்த்தார்.

சட்டென்று நான் எழுந்து, 'சரி சார். நாங்க படிக்கிறோம். உங்க கருத்தை இதப் படிச்சுட்டு சொல்லுங்க' என்றபடி 'குளத்'தை வைத்து விட்டு ராமுவை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே வந்ததும் ராமு நதிநர்த்தகனுக்கே கேட்கிறாற் போல் 'ஹோஹ்ஹோஹோ' என்று பெருங்குரலில் சிரித்தான்.

-லக்ஷ்மண்

குறிப்பு: (ஒரு கால) ஆதர்ச எழுத்தாளர்களின் மேலிருக்கும் மரியாதை, விளம்பரத்திற்க்கு ஆசைப்படாத எண்ணம், முடிச்சுகளின் நடுவே அகப்பட்டுக்கொள்வதற்கான பயம் ஆகியவற்றின் காரணமாய் பெயர்கள் கற்பனை ஆக்கப்பட்டுள்ளன.

Rate this post at தமிழ்மணம் வழங்கும் சேவையில் குளத்தின் ஆழத்தை மதிப்பிடுங்கள். தற்போதைய மதிப்பீடு: நட்சத்திரத்தை அழுத்தி நேரோ எதிரோ - பதிவு செய்யுங்கள்
 

நன்றி...நன்றி...

---------------------------------------------------------------------
25.12.05 தேதியிட்ட தினமலரில் எங்கள் தளத்தை அறிமுகப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ள தினமலர் ஆசிரியருக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி!

இது எங்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய உற்சாக டானிக்!!

Rate this post at தமிழ்மணம் வழங்கும் சேவையில் குளத்தின் ஆழத்தை மதிப்பிடுங்கள். தற்போதைய மதிப்பீடு: நட்சத்திரத்தை அழுத்தி நேரோ எதிரோ - பதிவு செய்யுங்கள்

Saturday, December 03, 2005

 

சுந்தர ராமசாமி - சில கேள்விகள்

---------------------------------------------------------------
சுந்தர ராமசாமி மறைந்து ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களில் பலருக்கும் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமே, எனக்கு சு.ரா வைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது என்பது தான். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியை எனக்கு மிகக் கொஞ்சமே தெரியும். அவரின் எந்தப் படைப்புகளையும் நான் இதுவரை முழுமையாக வாசித்திருக்கவில்லை.

எண்பதுகளில் அவருடைய "ஜே.ஜே சில குறிப்புகள்" உச்சத்தில் பேசப்பட்டபோது நான் ப்ளஸ் டூ மாணவன். ஆனாலும், அப்போது அந்த நாவலின் தலைப்பும், அதை எழுதியவரின் பெயரும், அது புதுமையான நாவல் (அப்போதெல்லாம் நவீனத்துவம் என்ற வார்த்தை அவ்வளவு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்) என்று நான் அந்தக் காலத்தில் மதித்த பல பெரிய எழுத்தாளர்கள் கொண்டாடியதும் மனதில் பதிந்து விட்டது. புதுமைகளோடு பரிச்சயம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேனும், சில ஒத்த சிந்தனை உடைய நண்பர்களுடன் அந்த நாவலை படிக்கத் தலைப்பட்டேன். எதுவும் புரியவில்லை. எனவே, அங்கங்கே சில பத்திகளைப் படித்ததோடு அந்த முயற்சி நின்று போய்விட்டது. எனினும், சுந்தர ராமசாமி என்ற பெயரும் அதனுடன் ஸ்லாகிக்கப்பட்ட புதுமையும் மனதில் தங்கிவிட்டன. அதன் விளைவாலேயே "ஒரு புளியமரத்தின் கதை"யும், பசுவய்யா என்பது அவர் தான் என்பதும் கூடத் தெரிந்து இருந்தது.

சு.ரா இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளும், அஞ்சலிக் குறிப்புகளும் வந்த நேரத்தில் திடுமென சு.ரா வைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. நவீனத்துவம் என்ற சொற்பிரயோகமும், "தமிழ் நவீனத்துவத்தின் லட்சிய உருவகம்" அவர் என்றும், அவருடையது " நவீனத்துவ சிந்தனைகளின் இறுக்கங்களில் கட்டுண்டு அலைக்கழிந்த ஆன்மா" என்றும் படிக்கப் படிக்க ஒரு ஆசை என்னை உந்தியது. இந்தத் தருணத்தில் அவரின் நாவல்களைப் படித்து அவரை உள்வாங்கிக் கொள்வதை விட, அவரின் கட்டுரைகளைப் படித்தால் அவரை இன்னும் தெளிவாகவும் விரைவாகவும் இனம் கண்டு கொள்ளலாம் என்று பட்டது. அதற்கு வாகாய், மதுரையில், தீபாவளி ரம்ஜான் விடுமுறைகள் மற்றும் மழை போன்ற தடைகளையும் மீறி, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திறந்திருந்த ஒரே புத்தகக் கடையில் அவரின் "ஆளுமைகள் மதிப்பீடுகள்" என்னும் முழுக் கட்டுரைத் தொகுப்பு 'சட்'டெனக் கிடைத்தது. எனக்கு மிகுந்த சந்தோஷம். கிட்டத்தட்ட எழு நூறு பக்கங்கள் கொண்ட முழுத் தொகுப்பு. எல்லாம் படிக்க முடியவில்லை ( நமக்கு அலுவலகம் என்று ஒன்று உள்ளதே??). பின்னர், நவம்பர் மாத உயிர்மை இதழின் அட்டையில் சு.ரா வின் புகைப்படத்தைப் பார்த்ததும் அதையும் வாங்கிப் படித்தேன். 'குமுதம் தீரா நதி'யில் அஞ்சலிக் கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றைப் படிக்கப் படிக்க சு.ரா என்றொரு பிம்பம் மனதில் துலங்கியது. இப்படிப்பட்ட கட்டுரைகளின், அஞ்சலிக் குறிப்புகளின் நோக்கமே அதுதான், இல்லையா??

அதிலும், உயிர்மையில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரை நாற்பது பக்கத்திற்கும் மேலே (சு.ரா ஜீவாவைப் பற்றி எழுதிய கட்டுரை சுமார் பத்துப் பக்கம் தான்). ஒரு படைப்பாளியின் ஆளுமையை நிச்சயம் பக்கக் கணக்கை வைத்து எடை போட முடியாது தானே? ஜெயமோகனின் அந்தக் கட்டுரை சு.ரா வின் பல முகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தது என்னவோ மிக மிக உண்மை. ஜெயமோகன் தவிர, மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், கோகுலக் கண்ணன், சி.மோகன், பெருமாள் முருகன், சங்கர ராமசுப்ரமணியன் என்று பலரின் அஞ்சலிகளைப் படித்ததும் சு.ரா பற்றி தோன்றிய சித்திரம் மிக விசித்திரமானது. புதிரானதும் கூட. மனுஷ்ய புத்திரன் குறிப்பிடுவது போல, அது ஒரு புனிதரின், ஒரு பிசாசின், பேரன்பு கொண்ட ஒரு தந்தையின் மற்றும் ஒரு சதிகாரனின் குணங்கள் கொண்ட ஒரு கலவையான சித்திரம். இவை எதுவும் சு.ரா உருவாக்கிய சித்திரங்கள் அல்ல என்று மனுஷ்ய புத்திரன் தெளிவாகச் சொன்னாலும், இந்த மொத்தக் கட்டுரைகளையும் படித்த பின்னர் ஏனோ அது மரியாதையின் பாற்பட்ட ஒரு அனுசரணை வாக்கியம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

சு.ரா வின் பல கருத்துக்கள் மற்றும் செய்திகள் படிக்கவும் கேட்கவும் மிக உவப்பாக இருக்கின்றன. அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பதை அனுமானிக்க அவரின் படைப்புகளை படித்திருக்காவிட்டாலும், இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் இருந்து அவர் பெரிய படிப்பாளி என்பதை மிக எளிதாக்வும் விரைவாகவும் புரிந்து கொண்டு விட முடிகிறது. எமர்சன், ரஸ்ஸல், எலியட், தல்ஸ்தோய் (டால்ஸ்டாயைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்), தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ் மன், கசந்த் ஸக்கீஸ், செகாவ், துர்கனேவ், ரோமெய்ன் ரோலந்த், நிகொலாய் கோகல் என்று இன்னும் பலர். இந்தக் கட்டுரைகள் எதிலும் சு.ரா படித்த அல்லது அவரைப் பாதித்த தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி பெரிதாய் குறிப்புகள் இல்லை (மேல் நாட்டவர்களுக்கு இருப்பது போல). வியாசர் பற்றி பேசியதாய், மலையாள எழுத்தாளர்கள் பற்றி விவாதித்ததாய் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். மற்றபடி, சு.ரா வின் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகள் பற்றி இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், சு.ரா, தன் ஆளுமைகள் பற்றி எழுதும் போது சிலரைக் குறிப்பிட்டிருக்கிறார். திருவள்ளுவர், பாரதி, டி.கே.சி, புதுமைப்பித்தன், ரகுநாதன் என்று சிலரை. சம கால எழுத்தாளர்கள் பற்றி பெரிய பாராட்டு எதுவும் இல்லாதபோதும் விமர்சனங்களுக்குக் குறைவில்லை.

பாரதியைக் கூட மற்றவர்களைப் போல 'ஆகா'வென்றெல்லாம் கொண்டாடுவதில்லை. கலை வடிவில் பாரதி தோற்றுவிட்டதாகவும் ஆனால் அவரின் கருத்து தன்னை கவர்ந்திருப்பதாகவும், இருபது கதைகளும் ஐந்து கவிதைகளும் எழுதி இருந்த காலக்கட்டத்தில் சு.ரா விமர்சிக்கிறார். பின்னர், பெரிய படைப்புகளை செய்து முடித்திருந்தபோது பாரதியை பற்றி அவரின் எண்ணத்தில் ஏதேனும் மாற்றம் உண்டானதா என்பது தெரியவில்லை. பாரதி தன்னிடமிருந்த கவிதா சக்தியை முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடாதா என்ற விசனம் சு.ரா விற்கு இருந்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே பாரதியின் வசன நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தபோதும், தமிழில் வசனத்தின் முதல் கலைப் படைப்புகள் காலமும் இயக்கமும் கூடித் தோன்றியது 1930 க்குப் பிறகே என்று தீர்மானமாகச் சொல்கிறார் சு.ரா. அப்படிச் சொல்வதோடு மட்டுமின்றி, இந்த வகை இலக்கியப் பிரக்ஞை கொண்ட முதல் கோஷ்டியில் கூட முக்கியமானவராக புதுமைப்பித்தனையே சுட்டுகிறார் (பாரதி இல்லை). புதுமைப்பித்தனை பல காரணங்களுக்காக அவருக்குப் பிடித்திருந்தாலும், அவரிடமும் 'மிதமிஞ்சியிருந்த சுதந்திரம்' ஒரு குறையே என்று விமர்சிக்கிறார்.

ஒரு புனிதர் என்ற நோக்கில், மனிதனை மனிதனாய் மட்டுமே, எந்தவிதப் புனிதப் பூச்சும் இன்றிப் பார்ப்பது என்ற வகையில் புதுமைப்பித்தன் பற்றிய அவரின் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடிந்தாலும், தமிழின் இலக்கியப் பிரக்ஞை உள்ள முன்னோடிகளின் பட்டியலில் பாரதியை அவர் மறந்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சு.ரா வின் மாணவர்கள் இதை 'சத்தியத்தின் வாள் வீச்சு' என்று கொண்டாடினாலும் கூட.

சம காலத்தில், அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை விமர்சித்திருக்கிறார். சுகுமாரனுக்கு தி.ஜா.ரா மீது இருந்த ஒரு பரவச மனோபாவத்தை அசைத்திருக்கிறார். ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று வாதிட்டிருக்கிறார், பிரமிளின் கவிதை அறிவுப்பூர்வமாய் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தியும், கு.ப.ரா வும் 'சிந்திக்கப் பயப்பட்டவங்க' என்று சொல்லியிருக்கிறார். வெங்கட் சாமி நாதனின் 'யாத்ரா' இதழை 'அட்டை டு அட்டை அவரே எழுதும் இதழ்' என்று கிண்டலடித்திருக்கிறார். தேவதேவனை ஏற்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு தீவிரமானவை இல்லை என்றாலும், சினிமா பற்றிய அவரது கருத்துக்களும் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை. மலையாளத்தின் ஜான் ஆபிரகாம் படங்களில் சு.ரா வை எதுவுமே கவரவில்லை. தமிழில் மகேந்திரனின் உதிரிப்பூக்களில் "லைப் இல்லை". சினிமா நடிப்பை சிவாஜி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி யின் இசையில் ஒரு அக ஒழுங்கே இல்லை.

"உன் படைப்புகள் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினை செய்ய மெனக்கெடாதே" என்று சுகுமாரனுக்கு கற்றுக் கொடுத்த சு.ரா எப்படி அடுத்தவர் மீதான படைப்புகளை இவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழில் சுத்தமான படைப்புகளே இல்லையா? நல்ல சினிமா வந்ததே இல்லையா? அனைவரையும் விமர்சித்த சு.ரா வின் சுய விமர்சனம் யாது? அது பற்றி எங்கேயும் குறிப்புகள் இருக்கின்றனவா? ஜே.ஜே சில குறிப்புகள் அது வெளி வந்த காலக்கட்டத்தில் இதைத் தானே செய்திருக்கிறது? அனைத்தின் மீதும் ஒரு எதிர்வினையையும் விழிப்புணர்வையும்??

ஒரு பெரிய சீடர் குழாமை அரவனைத்துக் கொள்பவராகவும் ஆனால் விலகியே இருப்பவராகவும் கடைசி வரை சு.ரா வாழ்ந்து முடிந்ததைப் படிக்கும் போது அவரின் எதிர்வினை சுட்டுகிற இயல்பு தான் இதன் காரணமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அவரின் இறுதிக் காலம் வருத்தம் தருவதாக இருந்ததற்கும், பெரும்பாலான நண்பர்களிடமிருந்து அவருக்கு ஒரு தெளிவான தூரம் உண்டாகி இருந்ததற்கும் வேரு விஷேசக் காரணங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

சு.ரா வின் கருத்துக்கள் ஆனால் உவப்பானவை. தெளிவானவையும் கூட. ''நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக்க் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகன் சரி வரப் புரிந்து கொள்கிறபோது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பான நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களை தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை உங்களால் ஏன் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் அவனால் என்னை நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்" என்று சு.ரா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய முந்தைய கேள்விகளுக்கெல்லாம் கூட சு.ரா வின் பதில் இது தானோ? இந்த சவால் தான் அவரை மூன்று நாவல்கள் மட்டுமே எழுத வைத்ததா? இந்த ஆரோக்கியமான ஒரு போட்டியை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் சு.ரா ஏற்படுத்திவிட்டாரா? அதை அவரின் சீடர்கள் பின்பற்றுகிறார்களா? என்னுள் நிறையக் கேள்விகள்!!

"எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்கு புரியறதில்லை. அந்தத் தத்தளிப்பு தான் துக்கமே. அப்பதான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு...ஏன் ஏன்னு தானே நம்ம மனசு தவிக்குது. எழுத்திலே அதெல்லாம் வரும் போது நமக்கு ஏன்னு தெரியறது..அதான்" என்று எழுதுவதன் பயனை அவர் சொல்கிறபோது என்னால் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது நல்ல சிந்தனை என்று நிச்சயமாய் படுகிறது.

புனிதம், மாறா நெறி என்றெல்லாம் சு.ரா குழப்பிக் கொள்ளவில்லை என்று படிக்கும் போது அவரின் மீதான மதிப்பு கூடுகிறது. "எந்த அறிவையும் புனிதப் படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும், நடை முறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றினால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்". ஒரு வேளை, இது தான் அவர் பாரதியையோ அல்லது புதுமைப்பித்தனையோ கூடத் தலையில் வைத்துக் கொண்டாடாததன் காரணம் என்று படுகிறது. ஆனால், இந்த நெறிகளை, இந்தக் கொள்கைகளை சு.ரா எந்த அளவிற்கு கடைப் பிடித்திருக்கிறார்? பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் தராத இந்த புனிதப் பூச்சு தல்ஸ்தோய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் கிடைக்கிறதே அது ஏன்? அவர்களுக்குப் பின் தமிழ் கண்ட ஒரே நவீனத்துவப் படைப்பாளி சு.ரா தான் என்ற பெருங்கூச்சலை அவரே ஏற்றுக்கொள்வாரா?

ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் எழுத்தாளர்கள் தம் கருத்தை தெரிவிக்க வேன்டும் என்று சு.ரா வலியுறுத்தி வந்திருக்கிறார். ஜெயேந்திரர் கைது தொடர்பான கட்டுரையில் "எழுத்தாளர்கள் செயல்படத் தடையாக இருப்பது சமூகம் சார்ந்த முட்டுக்கட்டை மட்டுமல்ல; சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து ஒதுங்கிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் மனோபாவம் தான் முக்கியமான தடை" என்றும் தீர்மானமாய் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியலில் சு.ரா மனமாற வெறுத்த கருனாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி ஆட்சி செய்த காலங்களில் அவர் விமர்சிக்கத் தகுந்த அளவு எந்த முக்கிய நிகழ்வுகளும் நடக்க வில்லையா என்று கேள்வி வருகிறது? ஒரு படைப்பாளி சமூகத்தில் நடக்கும் எந்த நிகழ்வை முக்கியம் என்று கொள்ள வேண்டும்? கேரளத்தில் எழுத்தாளர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறர்கள், வங்காள எழுத்தாளர்கள் மலைவாசிப் பெண்களின் தற்கொலை பற்றிப் போராட்டம் நடத்துகிறார்கள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள். மடாதிபதியின் சிறை வாசம் விளைவிக்கும் சமூக மாற்றங்கள் பெரிதா அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்பே இல்லாத மாணவிகளை எரித்தது விளைவித்த சமூக மாற்றங்கள் பெரிதா என்று நான் என்னையே இப்போது கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மரபு மீது சு.ரா விற்கு பெரிய அபிமானமோ மதிப்போ இல்லை என்றும் ஒரு வகையான உதாசீனமே இருந்தது என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகள் மீது அவருக்கு ஒரு விதமான வழிபாடு இருந்தது என்றும் படிக்கும் போதும் அவரின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதுவே, இந்தியச் சூழலில் அமெரிக்கா மீதான கடும் கண்டனம் இருந்து வருவதாலேயே சு.ரா தன் மேலை வழிபாடு பற்றி எழுதுவதில்லை என்று படிக்கும் போது, அவரின் நெறிகள் பற்றிப் பெருத்த சந்தேகம் உருவாகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், "தர்க்கப்பூர்வமாய்ப் பார்த்தால் தேசப்பற்றும், மொழிப்பற்றும் அசட்டு உணர்ச்சிகள்" என்று சொல்லியபடி அமெரிக்கக் குடியுரிமைக்கு முயன்று அவர் அரைக் குடியுரிமை பெற்றார் என்று உணரும் போது அவரே சொல்லிய மாதிரி 'எல்லா லட்சியவாதங்களும் நாடகத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது'. கதர் ஆடை அணிந்து வந்த சு.ரா சட்டென்று ஒரு நாளிலிருந்து ஜீன்ஸும், டி ஷர்ட்டும் அணிந்ததோ, அல்லது இந்தியக் கோயில்களை முற்றாக விரும்பாத ஆனால் பாரீஸின் அருகே நாஸ்டர்டம் சர்ச்சில் கண்ணீர் விட்டு அழுததோ கூட வியப்பாகவோ அதிர்ச்சியாகவோ தோன்றவில்லை. ஆனால், இந்திய மரபு மீது அபிமானம் கூட இல்லாமல் ஆனால் இந்தியா தொடர்பான எல்லா விஷயங்களிலும் ஒரு எதிர்வினையாடிக்கொண்டிருப்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இது, பிடிவாதமாய் தன்னை சாதரணங்களிலிருந்து விலக்கிக் கொள்கிற முயற்சியா?

எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் அறிவுப்பூர்வமான ஆய்வு நோக்குடன் மட்டுமே அணுகுபவராகவே சு.ரா இருந்தார் என்று ஜெயமோகன் எழுதுகிறார். 'துயரங்களின், தேடலின், அலைதலின் உச்சியில் தர்க்க மனம் அறியாத வாயில்கள் திறக்கக் கூடுவதை', அத்தகைய அறிவுப்பூர்வ அய்வுக்கு உட்படாத உணர்வுகள் மனித வாழ்க்கையில் எஞ்சியிருப்பதை சு.ரா கடைசி வரை அறிந்து கொண்டாரா தெரியவில்லை. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிட்டுப் பேசும் போது சு.ரா இப்படிக் குறிப்பிடுகிறார்: "துன்பப்படுபவர்களின் மனம், அவமதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துக்கம் தஸ்தயேவ்ஸ்கிக்குதான் நன்றாகத் தெரியும். ஏனென்றால் தல்ஸ்தோய் மேலிருந்து அவர்களை நோக்குகிறார். கிறிஸ்துவிற்கு இணையானதாக கருணை கொண்டதாக இருந்தாலும் அவருடையது மேலே இருக்கும் நோக்கு. துன்பப்படுபவன் தல்ஸ்தோய் தன் தோளில் விம்மியழுதபடி வைக்கும் கையைக் கசப்புடன் உதறி விடுவான். ஆனால், தஸ்தயேவ்ஸ்கி அவனிடம் வந்து சுருட்டுக்கு நெருப்புக் கேட்டால் தோழமையுடன் கொடுப்பான். ஏனென்றால் தஸ்தயேவ்ஸ்கி அவர்களுள் ஒருவன்"

நான் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்: சு.ரா வந்து இன்று விம்மியபடி தோளில் கை வைத்தால் இலக்கியப் பரிச்சயமுள்ள தமிழ் வாசகர்களில் எத்தனை பேர் அவரின் சுருட்டுக்கு நெருப்புக் கொடுப்போம்?

லக்ஷ்மணன்

Rate this post at தமிழ்மணம் வழங்கும் சேவையில் குளத்தின் ஆழத்தை மதிப்பிடுங்கள். தற்போதைய மதிப்பீடு: நட்சத்திரத்தை அழுத்தி நேரோ எதிரோ - பதிவு செய்யுங்கள்

Sunday, November 13, 2005

 

எங்களைப் பற்றி...

---------------------------------------------------------------
ஒற்றை வரியில் ஒரு அறிமுகம் வேண்டுமெனில், குளம் - தொண்ணூறுகளில் வெளி வந்த ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை. இன்று நீங்கள் பார்ப்பது அதன் விஞ்ஞான நீட்சியை. இந்த இயல்பான நீட்சி எங்களுக்குள் ஏற்படுத்தும் பரவசத்தை நிச்சயம் உங்களுக்குள்ளும் விதைத்து விட்டுப் போகும் என்பதில் எனக்கு நிறைய்ய நம்பிக்கை இருக்கிறது. அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

கையெழுத்துப் பத்திரிக்கை என்பது கண்டிப்பாக ஆர்வ மிகுதியின் விளைவுதான். சிலர் அனுபவங்களில் ஆர்வக் கோளாறின் விளைவாக முடிந்து விடுவதும் உண்டு! பக்குவம் அற்ற புது எழுத்தாளர்கள் தன் எழுத்துக்களை யாரும் பிரசுரிக்க முன்வராதபோது அவற்றைத் தானே வெளியிட்டுக் கொள்வார்கள். அது போல பலர் அனுபவங்களில் கையெழுத்துப் பத்திரிக்கை என்பது இள வயது 'இலக்கிய வெறிக்கு' ஒரு வடிகால் மாற்றாய் வாய்த்திருக்கிறது. குளம் கூட அப்படி ஒரு வடிகால்தான். ஆனால் இது ஆர்வ மிகுதியின் விளைவுதானே தவிர பிறிதில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

1984. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். பால் மணம் மாறாத முகத்துடன் அப்பாவின் நிழலில் ஒண்டியபடி வந்து பொறியியல் புலத்தில் சேர்கிறேன். ஒரு வார காலத்திற்குள் இராமு என்கிற ராமமூர்த்தி அறிமுகமாகிறான். அவன் திருவண்ணாமலையிலிருந்து அந்த ஜோதியுடன் வந்தவன். அங்கே தொடங்கியது இந்த ஒலிம்பிக் ஓட்டம்! தன் திருவண்ணாமலை நண்பர் குழாமை அறிமுகப் படுத்துகிறான். செந்தில், சுதா, விஜி என்கிற விஜயலக்ஷ்மி, குட்டி என்கிற சித்ரா என்று வட்டம் பெரிதாகிறது. ஒரு வருடத்திற்குள் இன்னொரு ஐக்கியம் - சிவராம். பின்னர் நிம்மு என்கிற நிர்மலா... இப்படி ஒரு இலக்கிய ஆர்வம் தழைக்கிற கூட்டம்.

பாலகுமாரன், வைரமுத்து என்று அந்த வயதிற்கு போதையேற்றியவர்கள் தான் எங்களுக்கும் ஆதர்சம். ஆனால் - அதையும் தாண்டி மீரா, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, கல்யாண்ஜி, லா.ச.ரா, கி.ரா, தி.ஜா, கு.ப.ரா, சுஜாதா, கண்ணதாசன், சோ, ஜெயகாந்தன் என்று எல்லைகள் இல்லாமல் யாரையும் படிக்க நேர்ந்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகம் அளித்த தடையற்ற இலக்கிய சூழலும் எங்களின் அதிர்ஷ்டம். இவை தந்த ஒரு நல்ல பதியத்தில் தான் குளத்திற்கான ஆரம்ப விதை விழுந்தது. அதன் பின்னர் நிறைய்ய விவாதங்கள், நிறைய்ய பரிமாற்றங்கள், நிறைய்ய சண்டைகளும் கூட!

வாழ்க்கை யதார்த்தங்கள் இலக்கிய கனவுகளை விடவும் வீர்யமிக்கவையாக இருந்த போதும் ஒரு மூன்றாண்டு தொடர் பரிமாற்றங்களினாலும், விவாதங்களின் விளைவுகளாலும் உதித்தது குளம்!

கையால் எழுதி, அனைவருக்கும் அனுப்பி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தளமாய் அமைந்தது. அப்போதைய இரண்டாண்டு கால கட்டத்தில் எங்களுக்குள் பிறந்த கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும், நையாண்டிகளும் இப்போதும் ருசியாய் இருக்கின்றன.

குளம் வளமாய் இருந்தாலும், அவரவர் வாழ்க்கைத் தேவைகளும், அலுவலக நிர்ப்பந்தங்களும் எங்களைப் பல பக்கம் ஈர்த்தன. குளம் வண்டலாய் தேங்கியது. ஆனாலும், இலக்கிய ஆர்வம் எங்களை ஒரு மெல்லிய இழையால் பிணைத்திருந்தது.

அந்த வண்டலின் வளமை கிட்டத்தட்ட இன்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் ஊற்றெடுக்கிறது. வற்றாத உணர்வுகளுக்கான வடிகால் தளமாய் இன்று புதுப் பொலிவடைகிறது. இந்தக் குளத்தில் எல்லாப் பூக்களும் உண்டு... குறும்புக் 'குமுதம்', அரசியல் 'தாமரை', 'கணையாழிக்' கரும்பு... எல்லாமே! குளத்தின் விளைச்சல் ருசியை உங்களுக்கும் அறிமுகப் படுத்தி எங்களது இலக்கிய வட்டத்தை இன்னும் விரிவாக்கவே குளம் இந்த விஞ்ஞான நீட்சி என்கிற வடிவம் எடுக்கிறது.

சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, சூரத் என்ற தூரம் இன்று பல பரிமாணங்கள் பெற்று பஹ்ரைன், துபாய், பாங்காக் என்று விரிந்து விட்டாலும், விஞ்ஞானத்தின் முன்னே வானம் கூட தொட்டு விடும் தூரம்தான் என்று புது உற்சாகம் கொடுத்த எங்களின் புதிய நண்பர் பினாத்தல் சுரேஷிற்கு வந்தனங்கள்!

வாருங்கள்... வடம் பிடியுங்கள். கூடி இழுப்போம், தமிழின் பழங்கூழ் குடிப்போம்!

லக்ஷ்மண்
---------------------------------------------------------------------------------

Rate this post at தமிழ்மணம் வழங்கும் சேவையில் குளத்தின் ஆழத்தை மதிப்பிடுங்கள். தற்போதைய மதிப்பீடு: நட்சத்திரத்தை அழுத்தி நேரோ எதிரோ - பதிவு செய்யுங்கள்

Saturday, September 10, 2005

 

படித்துறை

----------------------------------------------------------------------------------------------

Image hosted by TinyPic.com


வெய்யில் உடம்பை வெட்டிக்கொன்டிருக்கிறது. வியர்வைக் கசிவு வெளிப்பக்க எரிச்சலை ஏற்ப்படுத்த, எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து ஒரு ஏசி அறையில் உட்கார மாட்டோமா என்று ஒவ்வொறு முறையும் ஏக்கமாய் இருக்கிறது. சாத்தியப்பட்டால் சந்தோஷம் உச்சத்தை எட்டுகிறது.

அட வெளிப்புறத்திற்கே இந்த நிலை என்றால், மனதின் நிஜ சந்தோஷம் எவ்வளவு உயர்வு?... ஒரு நல்ல வயலின் இசை, பிடித்தமான மனிதர்களின் பேச்சு, யதார்த்தமான சினிமா, சுகமான எழுத்து... இதெல்லாம் எவ்வளவு மேன்மை?...

மேன்மை சரி, இவை எல்லாம் எத்தனை முறை கை கூடுகிறது?... ஒரு நல்ல நிகழ்ச்சிக்கும் அடுத்ததற்கும் நடுவே காலண்டர் எவ்வளவு நாட்களைத் துப்பி விட்டுப் போகிறது?... உறவுகளின் ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட நிர்ப்பந்தங்கள் நடுவே அந்த ' நிஜ தரிசனம்' கிடைப்பது எவ்வளவு சிரமமாய் இருக்கிறது?...

இந்த 'தரிசனத்தின்' மேல் உள்ள 'கரிசனம்' காரணமாய்த்தான் இந்த 'குளம்'...நல்ல எழுத்தின், பேச்சின் ஒரு தொகுப்புதான் இந்த தளம்... எங்கள் பார்வையின் எல்லைக்குள் பட்ட எல்லா நல்ல எழுத்தையும் தொகுத்து, ஒரு தொடரோட்டமுள்ள 'எழுத்து அருவியை' ஏற்ப்படுத்துதலே அடிப்படை எண்ணம்...

அருவி அருவியானதா?... இல்லை சென்னை கார்ப்பொரேஷன் குழாயின் சாத்வீகமான 'புஸ்'ஸா?... இல்லை தூறலா?...

பார்க்கலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------


Rate this post at தமிழ்மணம் வழங்கும் சேவையில் குளத்தின் ஆழத்தை மதிப்பிடுங்கள். தற்போதைய மதிப்பீடு: நட்சத்திரத்தை அழுத்தி நேரோ எதிரோ - பதிவு செய்யுங்கள்